Wednesday, September 1, 2010

சுலபம் Vs கடினம்

சுலபம் : அடுத்தவர் குறைகளை கண்டறிவது/சுட்டிக்காட்டுவது

கடினம் : தம் குறைகளை கண்டறிவது / ஒப்புக்கொள்வது

=====================================================================
2.

சுலபம் : வார்த்தகளை சிதற விடுவது / யோசிக்காமல் பேசிவிடுவது

கடினம் : நாவடக்கம்

====================================================================
3.

சுலபம் : தன்மீது நேசம் கொண்டவரை புண்படுத்திவிடுவது/ காயப்படுத்துவது


கடினம் : அந்த காயத்தை ஆற்றுவது

====================================================================
4.

சுலபம் : தவறுக்கு மன்னிப்பு கேட்பது

கடினம் : மன்னிப்பை ஏற்றுக் கொள்வது

====================================================================
5.

சுலபம் : சட்ட திட்டங்களை வகுப்பது

கடினம் : சட்டதிட்டங்களை கடை பிடிப்பது

====================================================================
6.

சுலபம் : தினம் தினம் கனவு காண்பது

கடினம் : கனவை நனவாக்கப் போராடுவது

====================================================================
7.

சுலபம் : வெற்றியை கொண்டாடுவது

கடினம் : தோல்வியை பக்குவத்துடன் எதிர்கொள்வது

====================================================================

8.

சுலபம் : அடுத்தவர்க்கு வாக்குறுதி குடுப்பது

கடினம் : குடுத்த வாக்குறிதியை நிறைவேற்றுவது

====================================================================
9.

சுலபம் : தவறுகள் செய்வது

கடினம் : செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது

====================================================================
10.

சுலபம் : முன்னேற்றத்துக்கு எது தேவை என்று பட்டியலிடுவது

கடினம் : அதை செயல்படுத்துவது

====================================================================
11.

சுலபம் : அடுத்தவர் உதவியை ஏற்றுக் கொள்வது

கடினம் : எதிர்பார்ப்பின்றி அடுத்தவர்க்கு உதவுவது

====================================================================
12.

சுலபம் : காதலியிடம் பலமணி நேரம் கடலை போடுவது

கடினம் : அதில் அர்த்தம் கண்டுபிடிப்பது


====================================================================
13.


சுலபம் : வீட்டம்மாவிடம் அடிவாங்குவது

கடினம் : வலிக்காத மாதிரி காட்டிக் கொள்வது



====================================================================
14.

சுலபம் : நண்பர்களை பெருவது

கடினம் : நட்பை பேனி காப்பது

====================================================================

15.

சுலபம் : இந்த மாதிரி மொக்கை பதிவு எழுதுவது

கடினம் : இதைப் படித்து கோவம் கொள்ளாமல் இருப்பது

Sunday, November 16, 2008

பிரதமர் மன்மோகன்சிங் - "எட்டும் எட்டப்பனும்"

பிரதமர் மன்மோகன்சிங் - "எட்டும் எட்டப்பனும்"

*

அரசியல் கலப்பில்லாத பொருளாதார மேதையான மன்மோகன் சிங் நாட்டின் பெரும் பொருளாதாரச் சிக்கலைத் தீர்த்து வைக்கவே முதன் முதல் நரசிம்மராவால் அரசியலுக்குக் கொண்டுவரப் பட்டார். இதனாலேயே அவர்மீது எனக்கு மிக்க மரியாதை உண்டு. ஆனால் இந்த அணு சக்தி விவகாரத்தில் ஏனிப்படி அவரும், அவரது அரசும் கட்சியும் ஒரு முரட்டுத்தனமான நிலைப்பாடை எடுக்கின்றன என்பது புரியாத புதிராகவே முதலிலிருந்து இருந்து வந்துள்ளது.

நாட்டின் நீர்நிலைகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது என்பதில் குறைந்த செலவில் நிறைய சக்தி பெருவதற்கானச் சாத்தியக் கூறுகள் மிக அதிகமாக இருப்பினும் ஏன் பல சூழலியல் காரணங்களுக்காக எதிர்க்கப்படும் அணு ஆலைகளுக்கு மிகப் பெரும் செலவு செய்யவே நமது அரசு எப்போதும் தயாராக இருக்கிறது என்பதே புரியாத ஒரு காரியம். இவ்வளவு செலவு செய்தும், வானத்திலிருந்து கொட்டுவதுபோல் மின்சாரம் நமக்கு குறைந்த செலவில் கிடைக்கப் போவதில்லை; தன்னிறைவையும் காணமுடியாது; அணு ஆலைகளின் அழிக்கவோ மாற்றவோ முடியாத அதன் கழிவுப் பொருட்கள் என்ற பல பிரச்சனைகள் இருந்த போதிலும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து அணுஆலைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் அரசியல் புரியவில்லை.

123 திட்டம், Hyde Act, N.S.G., என்று நித்தம் நித்தம் ஊடகங்களில் வரும் செய்திகள் மக்கள் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மட்டுமே பயன்பட்டன. இருபக்க விவாதங்களிலும் இருந்த தெளிவின்மையோ, அவரவர் சார்புக்கேற்றவாறு தரப்பட்ட விவாதங்களோ மேலும் மேலும் தெளிவின்மையை மட்டும் கொடுத்து வந்துள்ளன. ஆனால் 05,செப்ட். இந்து நாளிதழில் வந்துள்ள ஒரு கட்டுரை நம் அரசின், அயல்நாட்டமைச்சரின் எல்லாவற்றிற்கும் மேலாக நமது பிரதம மந்திரியின் “பொய்களை” வெளிப்படுத்துகின்றன. கட்டுரை ஆசிரியர்: Brahma Chellaney, a professor of strategic studies at the Centre for Policy Research in New Delhi, is the author, among others, of “Nuclear Proliferation: The U.S.-India Conflict.

கட்டுரையின் தலைப்பு: Revelations unravel hype and spin
தொடுப்பு: http://www.hindu.com/2008/09/05/stories/2008090553271100.htm

அமெரிக்க அரசின் இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தம் பற்றிய சில குறிப்புகள் –இதுவரை வெளியிடப்படாமலிருந்தவைகள் – இப்போது வெளிவந்துள்ளதையும் அந்தக் குறிப்புகளுக்கு முற்றிலும் எதிர்மறையானக் கருத்துக்களை நமது அரசும் பிரதம மந்திரியும் நம்மிடம் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதையும் இக்கட்டுரை ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்:

அமெரிக்க அரசின் குறிப்பு 1: இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை எவ்வகையிலும் எரிபொருளை இந்தியாவுக்குத் தொடர்ந்து தருவதற்கு வற்புறுத்தாது.
ஆனால் மன்மோகன்சிங் தொடர்ந்து அமெரிக்கா எரிபொருளைத் தரும் என்று ஆகஸ்ட்13, 2007-ல் மக்களவையில் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசின் குறிப்பு 2: இந்தியா எக்காரணம் கொண்டும் எப்போதும் அணு சோதனைகளை நடத்தக் கூடாது.
ஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: நமது அணுசோதனகளுக்கு எவ்விதத் தடையுமில்லை.

அமெரிக்க அரசின் குறிப்பு 3: 123 உடன்பாடு Hyde ACtக்கு உட்பட்டது.
ஜூலை 2, 2008 – மன்மோகன்சிங்: 123 உடன்பாடு Hyde Actக்கு உட்பட்டதல்ல.

அமெரிக்க அரசின் குறிப்பு 4: எரிபொருள் தருவதோ எப்போது வேண்டுமென்றாலும் நிறுத்துவதோ அமெரிக்க அரசின் விருப்பத்திற்குரியது.
ஆகஸ்ட் 13, 2007 – மன்மோகன்சிங்: விரிவான பல அடுக்கு ஆலோசனைக் கட்டங்கள் இருப்பதால் எரிபொருள் நிறுத்தப்படும் சாத்தியமில்லை.

அமெரிக்க அரசின் குறிப்பு 5: எதிர்காலத் தேவைக்கேற்ப எரிபொருளை சேமித்து வைக்கும் உரிமையை அமெரிக்க அரசு கொடுக்காது.
ஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு அமெரிக்க அரசு உதவும்.

அமெரிக்க அரசின் குறிப்பு 6: 123 உடன்பாட்டிலிருந்து வேறுபடும் எந்த முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளக் கூடாது.
ஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: உடன்பாட்டிற்குப் பிறகும் எந்த புது மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமையுள்ளது.

அமெரிக்க அரசின் குறிப்பு 7: உடன்பாட்டின்படியோ இல்லை அதைவிடுத்தோ அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அணுசக்தியைப் பற்றிய எந்த புதுதொழில் நுட்பங்களையும் பெற உதவாது.
மன்மோகன் சிங்: இந்த உடன்பாடு இந்தியா புது தொழில்நுட்பங்களைப் பெறவும் நாட்டை தொழில்மயமாக்கலில் முன்னேற்றவும் உதவும்.

அமெரிக்க அரசின் குறிப்பு 8: தமிழ்ப் படுத்த சிரமம். அங்கேயே போய் வாசித்துக்கொள்ளுங்களேன்.

ஆக, இந்த எட்டு அமெரிக்க அரசின் குறிப்புகளுக்கு நேர் எதிரிடையாக நம் பிரதமர் அளித்துள்ள விளக்கங்களை வாசித்தபோது எட்டும் எட்டப்பனும் என்ற தலைப்பு மனதில் தோன்றியது. நம் நாட்டை அடகு வைக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது. எத்தனையோ எரியும் பிரச்சனைகள் இருந்தும் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குவதும் ஏனென்று தெரியவில்லை; தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

*

Thursday, July 10, 2008

இது தசாவதாரம் விமர்சனப் பதிவு அல்ல


இது தசாவதாரம் விமர்சனப் பதிவு அல்ல. அந்தப் படம் பார்த்த கதை. அவ்வளவே.போன வெள்ளிக்கிழமை. தங்க்ஸோடு சினிமா பார்த்திர்ரதுன்னு முடிவு செய்து, மதுரையிலேயே தசா நடக்கிறதில்ல எது நல்ல தியேட்டர் என்று நாலுபேருகிட்ட விசாரிச்சி, வீட்ல இருந்து ரொம்ப தொலைவில் - திருநகரில் - உள்ள இம்பாலா படக் கொட்டகையை முடிவு செஞ்சி அதுக்காகவே அங்க இருக்கிற தங்க்ஸின் அண்ணன் வீட்டுக்குச் செய்தி சொல்லியாச்சி. அவங்க வீட்டுக்குச் சீக்கிரமே போனாலும் படம் எத்தனை மணிக்குச் சரியா போடுவாங்கன்னு தெரிஞ்சுக்கணுமே. ஏன்னா நம்ம பதிவுலக மக்கள் எல்லோரும் ஒருமித்து சொன்ன ஒரே விஷயம் முதல் 15 நிமிடம் உலகத்தரம் அப்டின்னு. அதை மிஸ் பண்ணிடக்கூடாதே அப்டின்றதுக்காக போற வழியில் இருந்த கொட்டகைக்குப் போய் எப்போன்னு கேட்டுடலாம்னு நேரே அங்க போனோம்.கொட்டகைக்கு முன்னால் போய் நின்னதும் வாயில்காப்பாளர் எங்களை நோக்கி ஓடிவந்தார். எப்போ படம் அப்டின்னு கேட்டோம். மதியம் இரண்டரைக்கு என்றார். காலைக்காட்சி அப்போது நடந்து கொண்டிருந்தது. டிக்கெட் எல்லாம் சுலபமா கிடைக்குமா என்று கேட்டேன். கிடைக்கும். ஆனால் இப்பவே வாங்கிக்கொள்ளுங்களேன் என்றார். சரி,இறங்கி வாங்குவோம்னு நினைத்த போதே தானே வாங்கித் தருவதாக மிக அன்பாகச் சொன்னார். இருந்தும் தியேட்டர் எப்படி இருக்கிறதென்றும் பார்ப்போமே என்று எண்ணி உள்ளே சென்றேன்.தடபுடலாக பயங்கர மரியாதையோடு என்னோடுகூடவே காப்பாளரும் வந்தார். சீட்டு கொடுக்குமிடம் வந்தது எவ்வளவு என்றேன். காப்பாளர் எனக்கான முடிவை அவரே எடுத்துவிட்டார். 'சார், உங்கள பார்த்ததுமே நினச்சிட்டேன்; 100 ரூபாய் டிக்கெட் எடுங்க' என்றார். நம்மைப் பார்த்தாலே அப்படியா ஈனா வானா மாதிரி தெரியுது அப்டின்னு நானா நினச்சிக்கிட்டேன். இந்த கொட்டகையைக் கையைக் காட்டினவர்களோ ஒரு டிக்கெட் 50 ரூபாய் என்றுதான் சொல்லியிருந்தார்கள். அதை அவரிடமே சொன்னேன். இல்ல சார், இது பாக்ஸ்; வந்து பாருங்க அப்டின்னு கையைப் பிடிக்காத குறையா கூட்டிட்டு போனார். நானும் கூடப் போய் பார்ப்போமேன்னு போய்ட்டேன். ஒரு வாசலைத் திறந்தவர் உள்ளே அழைத்தார். உள்ளே போனதும் டக்குன்னு விளக்கைப் போட்டுட்டார். மொத்தம் 4 பேர். 4 வரிசைகளில் இரண்டிரண்டு சோஃபா. 4 பேரில் இரண்டு பேர் இளம் ஜோடி. தட தடன்னு ரெண்டும் ஒருமாதிரி எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்ததுகள். காப்பாளரையும் விரைந்து வெளியே இழுத்து வந்தேன். இப்படி கரடியா மாறிட்டோமே அப்டின்னேன். எனக்கு தெரியுமா, சார் அப்டின்னு அப்பாவியா கேட்டார். இந்த பாக்ஸ் மட்டும் குளிரூட்டப்பட்டது என்றார். சரின்னு மூணு சீட்டு வாங்கிட்டு வீட்டுக்குப் போய்ட்டு 2.20-க்குத் திரும்பி வந்தோம். படம் முடிந்து கொட்டகையை சுத்தப்படுத்திட்டு 2.45 மணியளவில் படம் போட்டார்கள். காப்பாளர் இப்போது மீண்டும் வந்து விளக்கு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு சொல்லிட்டு, வேற ஏதும் வேணுமான்னு கேட்டார்; இல்லைன்னேன். எதுன்னாலும் சொல்லுங்க,சார் அப்டின்னு ஒரே கவனிப்பு. இந்த முறை எங்க 'பாக்ஸில்' எங்களைத் தவிர்த்து இன்னும் ரெண்டு ஜோடி. அதுல ஒண்ணு .. சரி..சரி... அத விடுங்க. படத்தைப் பார்ப்போம்.படம் எனக்குப் பிடிச்சிது; தங்க்ஸுக்குப் பிடிக்கலை. ஸ்ரேயாவும் தலைவரும் வந்து ஒரு பாட்டு பாடினா எப்படி இருந்திருக்கும்; சும்மா எல்லோரும் ஓடிக்கிட்டே, அடிச்சிக்கிட்டே இருந்தா .. என்ன இது அப்டின்னிட்டாங்க. குசேலன் கூட்டிட்டுப் போயிடவேண்டியதுதான், சிவாஜி மாதிரி.ஒண்ணு புரிஞ்சிது. கமல் ஒரே தப்பை திரும்பவும் செஞ்சிக்கிட்டே இருக்கிறார். நானும் இந்தப் படம் அவரின் magnum opus என்றெல்லாம் சொன்னதும் என்னமோ ஏதோ என்று நினச்சிட்டேன். நம்ம பதிவர்களும் எப்படி ஒவ்வொரு 'அவதாரத்துக்கும்' வைத்த பெயர்கள் கூட எப்படி தசாவதாரத்தோடு தொடர்புள்ளன; வண்ணாத்திப் பூச்சி பறக்கிறது - choas theory - அது இதுன்னு பில்டப் கொடுத்திருந்தாங்களா, வேற மாதிரி நினச்சிட்டுத்தான் போனேன். போன பிறகுதான் தெரிஞ்சுது நம்ம டைரடக்கர்கள் எல்லோருமே தங்கள் படம் வெளியாவதற்கு முன் கொடுக்கும் பேட்டியில் 'இந்தப் படத்தில் எல்லோருக்கும் பிடித்த - காதல், பைட், செண்டிமெண்ட், நகைச்சுவை - எல்லாமும் இருக்கும் என்பார்களே அந்தமாதிரி படம்தான் இது அப்டின்னு. நான் வேற வித்தியாசமான genre என்று நினச்சது மாதிரி இல்லாம, இதுவும் எல்லாப் படமும் மாதிரியான 'ஒரே மாதிரிப்' படம் அப்டின்னு தெரிஞ்சிது. ஒரு விசயகாந்த் படத்தில் அவரை வில்லன் துப்பாக்கியால் சுட அது அவர் நெஞ்சில் பட்டு அப்படியே திரும்பி சுட்டவன் மேல் பாய்ந்து சுட்டவனையே கொன்றுவிடும்! இங்க கொஞ்சம் மாத்தி குண்டு பட்டு அவ்தார்சிங்கின் கேன்ஸர் சுகமாயிரும். உன் காதலன் உன்னைக் காப்பாற்ற திரும்பி வருவான் என்று சொல்லும்போது அசின் அதெல்லாம் வரமாட்டான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கமல் உள்ளே நுழைய, அந்தக் கணத்திலேயே கதாநாயகிக்குக் காதல் வந்திருமே அதெல்லாம் நமக்குப் புதுசா என்ன? கதாநாயகனைத் துப்பாக்கியால் எத்தனை ரவுண்டு சுட்டாலும் அப்போ மட்டும் குண்டு குறி தவறிப் போகுமே அது நாம் எத்தனை உலகத்தரமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்த்திருப்போம். அத்தனை பெரிய பெருமாள் சிலையையே கடலுக்குள் இருந்து கரைக்குக் கொண்டுவந்து போட்ட சுனாமி அலைகள் நம் கதாநாயகன், கதாநாயகி இருந்த படகை மட்டும் தொடாமலே சென்று விடுமே அதெல்லாம் Our film heroes are non-destructible என்ற தத்துவத்தை ருசிப்பிக்குமே, அது புதுசா என்ன?இதெல்லாம் சாதாரண ரசிகனுக்கும் போய்ச்சேரும் விஷயங்கள். ஆனால் தன் மேதாவித்தனத்தைக் காண்பிக்கவும், நம் பல பதிவர்கள் போன்ற மேதாவிகளின் புத்திசாலித்தனத்துக்குத் தீனியாகவும் கேக் மேல் இருக்கும் icing போல் சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார். அவைகள்தான் அந்த choas theory, வண்ணாத்திப் பூச்சி, ஒவ்வொரு 'அவதாரத்துக்கும்' வைத்த பெயர்கள், அந்த continuity எல்லாமுமே. இந்த முலாம் பூச்சுதான் இத்தனை காரசார விமர்சனங்களுக்கும் காரணம். இது ஒரு 'ஒரிஜினல் நயம் பொழுதுபோக்குப் படம்' அப்டின்னு முதலிலேயே சொல்லியிருந்தால் இதைவிட இந்தப் படத்துக்கு வரவேற்பு இருந்திருக்குமென நினைக்கிறேன்.ஹே ராம் ஒரு இளைஞனின் கதை என்று மட்டும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைவிட்டு விட்டு அந்தக் கதைக்குப் பல வரலாற்றுப் பூச்சுக்கள், அரசியல் வர்ணங்கள் கொடுத்ததால்தான் தேவையற்ற விவாதங்கள் படம் வருவதற்கு முன்பே. அந்த விவாதங்களே படத்திற்கு எதிர்விளைவானது. கடும் உழைப்பும், பெரும் திறனும் பின் தள்ளப்பட்டு விட்டன. கமலின் படங்களுக்கு அவைகள் வெளியாவாதற்கு முன் கொடுக்கப்படும் hype அந்தப் படங்களைப் பற்றிய தவறான புரிதல்களையோ, எதிர்பார்ப்புகளையோ கொடுத்து மக்களைத் திசை திருப்பிவிடுகின்றன.பாலகுமாரன் கதையான குணா நல்ல வேளை இதிலிருந்து கொஞ்சம் பிழைத்தது. சாதாரணமாக ஒரு கடத்தல் கதை போல் இருந்தாலும், பின்புலத்தில் பரமாத்மா (அபிராமி), ஜீவாத்மா (குணா) இடையிலான உறவு என்ற தத்துவமும், இன்னும் சில உள்ளடங்கிய தத்துவங்களும் படத்தின் வெளிப்படையான கடத்தல் கதைக்குள் பொதிந்து வைக்கப்பட்டன. புரிந்தால் புரிந்து கொள்ளப்படட்டும் இல்லாவிட்டில் இருக்கவே இருக்கிறது காதல் - கடத்தல் என்ற கதையாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து, அதிகப் பிரச்சனைகள் இல்லாமல் ஓடியது.கமல் படங்களுக்குக் கொடுக்கப்படும் இந்த hype இல்லாவிட்டால் அவரது படங்கள் இன்னும் ரசிக்கப்படும் என்றே தோன்றுகிறது.அதென்ன .. எல்லாரும் சொல்லி வச்சாப்புல தசா.வில ஜெயப் பிரதாவைப் பத்தி ஒண்ணுமே கண்டுக்கலை .. சே.. ஓல்டுன்னாலும் கோல்டு கோல்டுதான்!

Sunday, March 23, 2008

திரையில் ஒடிய ரயில்

தமிழ் சினிமாவிற்கும் ரயிலுக்கும் உள்ள தொடர்பு விசித்திரமானது. சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற ரயில்வே ஊழியர் தான் மௌனப்படங்களை ஊர் ஊராக எடுத்துச் சென்று திரையிட்டவர். ஆரம்ப கால கறுப்பு வெள்ளைப் படங்களில் கதையில் ஏற்படும் கால இட மாற்றங்களைத் தெரிவிப்பதற்காகவே ரயில் பயன்படுத்தபட்டிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இரண்டு ரயில் காட்சிகள் எப்போதும் பசுமையாக உள்ளன. ஒன்று தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி பத்மினி இருவரும் ரயிலில் செல்லும் காட்சி. அதுவும் பத்மினியின் அருகாமையில் உட்காருவதற்காக பாலையாவை இடமாற்றம் செய்வதும் அதற்குப் பாலையா சொல்லும் காரணமும் பத்மினியின் அம்மா முறைப்பதும், கொசுக்கடி ஜாஸ்தியா இருக்கில்லை என்று பாலையா புலம்புவதும் இன்றைக்கும் சிரிக்கும்படியாக உள்ளது.மற்றது மூன்றாம்பிறை படத்தில் இடம் பெறும் ரயில்காட்சிகள். குறிப்பாக தன்னை அடையாளம் மறந்து போன ஸ்ரீதேவிக்கு தான் யார் என்பதை நினைவுபடுத்துவதற்காக மலைரயில் நிலையத்தில் குட்டிக்கரணம் போட்டு மின்சாரக் கம்பத்தில் மோதி விழும் கமலின் நடிப்பும், நிஜம் தானா எனப்புரியாத ஸ்ரீதேவியின் கலக்கமும் கொண்ட காட்சி. லூமியர் காலத்தில் இருந்தே சினிமாவின் பிரதான களம் ரயில். லூமியர் ரயில் வருவதையே முதன்முதலில் படம் பிடித்துக் காட்டினார். அதே ரயில் நிலையத்தில் லூமியரின் நுற்றாண்டைக் கொண்டாடும் விதமாக மின்சார ரயில் வருவதை அதே காட்சிக்கோணத்தில் அதே கேமிராவால் படமாக்கியிருப்பதை சமீபத்தில் பார்த்தேன்.சத்யஜித்ரே தனது நாயக் என்றபடம் முழுவதையும் ரயிலிலே படமாக்கியிருப்பார். அதுபோலவே மதராஸ் மெயில் என்ற மலையாளப்படமும் ரயிலுக்குள்ளாகவே படமாக்கப்பட்டிருக்கிறது.ரயில் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத காட்சிப்பொருள். பயன்படுத்துகின்ற இயக்குனருக்கு ஏற்ப அதன் முக்கியத்துவம் குறியீடாகவோ பொழுதுபோக்காகவோ மாறியமைகிறது. கறுப்பு வெள்ளைப் படங்களில் பட்டணத்தைக் காட்ட வேண்டும் என்றால் உடனே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் ரயில் வந்து நிற்பதையும் தான் காட்டுவார்கள். ரயிலின் வருகை நகரமயமாவதன் குறியீடாக முன்வைக்கபட்டது.ரயில் மையப்பொருளாக வந்த தமிழ்ப் படங்களில் மூன்று குறிப்பிடத்தக்கவை. ஒன்று கிழக்கே போகும் ரயில். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான காதல் கதை. பிரிந்த காதலர்கள் ஒருவரோடு மற்றவர் தொடர்பு கொள்வதற்கும் தூது செல்வது போல ரயிலைப் பயன்படுத்திக் கொள்வார்கள். கூட்ஸ் ரயிலின் பின்னால் எழுதப்பட்ட வாசகங்களும், அதை நகரில் வாழும் கதாநாயகன் வாசித்து அறிந்து கொள்வதும் அந்த நாட்களில் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் படம் கிராம வாழ்வைப் பற்றியது என்பதால் நகரத்திற்கும் கிராமத்திற்குமான இணைப்பாக மட்டுமே ரயில் அடையாளப்படுத்தபட்டிருந்தது.மற்றது ஒரு தலை ராகம். கல்லூரிக்கு ரயிலில் செல்லும் நுற்றுக்கணக்கான இளைஞர்களின் அன்றாட வாழ்வை இப்படம் விவரித்தது. மாயவரத்தில் உள்ள கல்லூரிக்கு ரயிலில் செல்லும் மாணவர்களுள் ஒரு தலையாக காதல் செய்யும் சங்கரின் வாழ்வைப் படம் விவரிக்கிறது. ரயில் நிலையம். ரயிலில் செல்லும் மாணவர்கள். அவர்களுக்குள் நடக்கும் கேலி, காதல் என்று படம் முழுவதும் ரயில் சார்ந்த நிகழ்வுகள் காரணமாக இந்த படம் வெகுஜன ரசனையில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. சமீபமாக மணி ரத்னத்தின் அலைபாயுதே. இதுவும் காதல் கதையே. மின்சார ரயிலில் பயணம் செய்யும் மருத்துவக்கல்லூரி மாணவியான ஷாலினியை எப்படி மாதவன் துரத்தித் துரத்தி காதலிக்கிறான் என்பதை விவரிக்கிறது. படம் மின்சார ரயில் நிலையத்தில் துவங்குகிறது. மின்சார ரயில் சார்ந்த காட்சிகளும். ரயில் நிலைய படிக்கட்டுகளில் கூட்டத்தின் ஊடே இருவரும் பேசி சண்டையிடுவதும் மனைவியை காணமல் தேடி சலித்து அமரும் இரவு நேர ரயில்வே நிலைய காட்சிகளும் என்று ரயிலை மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தார் மணி ரத்னம்.இப்படத்தில் மட்டுமில்லை. அவரது எல்லாப் படங்களிலும் ரயில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தளபதியில் பிறந்த குழந்தையை ரயிலில் விடும் காட்சி, உயிரே படத்தில் மனிஷாவை ரயில் நிலையத்தில் சந்தித்த முதல்நிமிசத்தில் காதல் கொள்வது, மௌனராகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரயில்வே தண்டாவளங்களின் நடுவில் ஒன்று சேர்வது. குரு படத்தில் வீட்டைவிட்டு ஒடும் ஐஸ்வர்யாவை குரு ரயிலில் சந்திப்பது. அடிவானத்து சூரியனோடு சேர்ந்த ரயில் வருகை. என்று பழைய நீராவி என்ஜின் காலத்திலிருந்து மின்சார ரயில் வரை பல்வேறுவகைப்பட்ட ரயிலும், ரயில் சார்ந்த காட்சிப்பதிவுகளும் அவரது படங்களில் இடம் பெற்றுள்ளன. அவரது திரைப்படங்களில் ரயில் நிலையம் எதிர்பாராத சந்திப்பிற்கான ஒரு நிகழ்வெளி. அல்லது சில நேரமே தோன்றி மறைந்து போகும் விந்தை. இந்த இரண்டு நிலையிலுமே ரயில் தொடர்ந்து பயன்படுத்தபட்டிருக்கிறது. ஆனால் அதைக் காட்சிப்படுத்தியுள்ள விதம் தமிழ் சினிமாவில் புதியது. நான் பார்த்த ரயில் காட்சிகளில் சிறந்தது என்று பிரேசில் நாட்டுப் படமான சென்ட்ரல் ஸ்டேஷன் படத்தில் வரும் ஆரம்பக் காட்சியையும், டேவிட் லீன் இயக்கிய டாக்டர் ஷிவாகோ படத்தில் வரும் சைபீரியாவிற்கு செல்லும் ரயிலையும் சொல்வேன். உயிரே படத்தின் ஆரம்ப காட்சிகள் தமிழ் சினிமாவில் புதியது மழை பெய்த இரவு. தீக்குச்சி தேடி அலையும் இளைஞன். தாமதமாக வரும் ரயில். சூறைக்காற்றும் மின்னல் வெட்டும் சேர நிமிச நேரத்தில் தோன்றி மறையும் பெண் உருவம். அவளுக்காக தேநீர் வாங்கச் செல்வது. அதற்குள் ரயில் வந்துவிடவே அவள் புறப்படுவது. மழைத் துளி வீழ்ந்த தேநீரை கையில் வைத்தபடியே ஒடிவருவதற்குள் ரயில் கிளம்பிப் போவது. உலகிலே மிகக் குறைவான நேரத்தில் தோன்றி முடிந்து போன காதல் இதுவாக தான் இருக்க கூடும் என்ற வசனம் என்பவை மணிரத்னம் ரயிலை எந்த அளவு கதையின் பிரிக்கமுடியாத பகுதியாகப் பயன்படுத்துகிறார் என்பதற்குச் சிறந்த உதாரணம்.சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி படத்தில் ரயிலைப் பார்க்க அப்பும் அவனது அக்காவும் ஒடுவார்கள். புகையோடு ரயில் கடந்து செல்வதை வியந்து பார்ப்பார்கள். அதைக் நவீனத்துவத்தின் குறியீடு என்று சினிமா விமர்சகர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். காட்சிப்படுத்தபட்ட முறையில் அது காவியத்தன்மை கொண்டது. ஆனால் தமிழ் சினிவமாவில் இது போன்ற குறியீடுகள் முக்கியமானவை அல்ல. வணிக முயற்சிக்கான உத்தியாகவே ரயில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது. குறிப்பாக ரயிலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பாடல் காட்சிகள். அதிலும் கூட மணிரத்னத்தின் உயிரேயில் இடம் பெற்றுள்ள தைய்ய தைய்யா பாடலும் அவரது தயாரிப்பில் வெளியான பைவ் ஸ்டார் படத்தில் இடம்பெற்ற ரயிலே ரயிலே ஒரு நிமிசம் என்ற பாடலுமே முக்கியமானவை. தைய்ய தைய்யா பாடல் ஊட்டி ரயிலில் தான் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பாடல் என்றால் இன்னொரு பக்கம் சண்டை. ஷோலே படத்தின் துவக்கத்தில் இடம்பெற்ற ஒடும் ரயிலின் சண்டைக் காட்சி தமிழ் படங்களில் இன்று வரை ரயிலில் சண்டை வைப்பதற்கு தொடர்ந்த தூண்டுதலாகவே உள்ளது. குறிப்பாக முரட்டுகாளை. கேப்டன் பிரபாகரன், போன்ற படங்களில் ரயில்ச்சண்டைகள் சிறப்பாகப் படமாக்கபட்டிருந்தன.பச்சை விளக்கில் துவங்கி, ரிதம். காதல்கோட்டை, அன்பே சிவம், பிதாமகன், பச்சைகிளி முத்துசரம் சமீபத்தில் வெளியான எவனோ ஒருவன் போன்று பல படங்களில் கதையின் முக்கிய நிகழ்வுகள் ரயிலில் நடைபெறுவதாக காட்சிபடுத்தபட்டுள்ளன. இதில் அன்பே சிவம் படத்தில் இடம் பெற்றுள்ள ரயில் விபத்துக் காட்சியும் எதிர்பாராமல் ரயில் நிறுத்தப்படுவதும், ஆள் அற்ற ரயில் நிலையத்தின் இரவு காட்சிகளும் தேர்ந்த ஒளிப்பதிவு செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க காட்சிகளாகும்.சமீபத்தைய ரயில்வே துறையின் கெடுபிடிகள் ரயில் சார்ந்த காட்சிகளை படமாக்குவதில் பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளன. தற்போதைய படங்களில் ஹெலிகாப்டர் வேண்டும் என்றால் கூட எளிதில் கிடைத்துவிடும். ஆனால் உண்மையான ரயில் நிலையமும் ரயிலும் தேவை என்றால் அது மலையைப்புரட்டும் செயல். அதன் காரணமாகவே பெரும்பான்மை படங்களில் ரயில் காட்சிகள் தவிர்க்கபடுகின்றன. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது புறப்பட்ட கடைசி ரயிலில் கூட்டம் கூட்டமாக வீடிழந்த அகதிகளான மக்கள் ரயிலின் உச்சியில் ஏறி உட்கார்ந்து பயத்துடம் தப்பிபிழைக்கும் உயிராசையுடனும் இருந்த புகைப்படங்கள் ரயில் பற்றிய அழியாத படிமமாக என் மனதில் நிற்கின்றன. அந்தக் கடைசிரயில் பயணத்தை மட்டுமே ஒரு படமாக்கலாம். இது போன்ற வலுவான காட்சிப் படிமமாக தமிழ் சினிமாவில் ரயிலை யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் தொடர்ந்து இருக்கவே செய்கிறது.

Suspect Everybody’

Suspect Everybody’ – சேகுவேரா‘அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரேநீங்க தடுக்கவில்லையா?’ என்றேன் நண்பரிடம்.‘அது அவருடைய நம்பிக்கை.நான் மற்றவர்களுடைய நம்பிக்கைகளில்குறுக்கிடுவதில்லை’ என்றார் வெகு அமைதியாக.அடப்பாவிகளா…எது நம்பிக்கை?எது மூட நம்பிக்கை?எது தன்னம்பிக்கை? என்று யோசிக்க ஆரம்பித்தால் தலை சுற்றுகிறது.முதலில் ‘தன்னம்பிக்கை’ப் பிரியர்களைப் பார்ப்போம்.இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.‘மேலதிகாரியைத் திருப்திபடுத்துவது எப்படி?’,‘நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்?’,‘கொழுந்தியாளைக் கோணாமல் பார்த்துக் கொள்வது எவ்வாறு?என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள்.‘பல் விளக்குவது எப்படி

ஜெயமாலா பட்டபாடு

தொட்டால் பூ மலரும்’ என்று பாடியபடியே அய்யப்பனைத் தொட்டுவிட்ட ஜெயமாலா பட்டபாடு பெரும்பாடாகி விட்டது. ‘தொடாமல் நான் மலர்ந்தேன்’ என்று பதிலுக்கு பாட்டு வந்ததா இல்லையா என்பதை உண்ணிக் கிருஷ்ண பணிக்கன்தான் சொல்ல வேண்டும்.மொத்தத்தில் “ஹண்ட்ரட் பர்செண்ட் லிட்ரசியாக்கும்….”(அதாவது நூறு சதவீத எழுத்தறிவு) என்று பீற்றிக்கொண்டிருந்த மொத்த கேரளாவும் சோளி குலுக்கிப் போட்டு….சாமி சிரிக்கிறதா….?குளிக்கிறதா….?குஷியாக இருக்கிறதா…? என்றெல்லாம் ‘பிரஸ்னம்’ பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ஒரு உண்மை விளங்குகிறது.எழுத்தறிவு என்பது வேறு.பகுத்தறிவு என்பது வேறு என்கிற உண்மைதான் அது.இந்த […]

அப்பாலே போ சாத்தானே

அவசர அவசரமாக ரேஷன் கடையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவனைப் பிடித்து நிறுத்தி கையில் ஒரு நோட்டீசைத் திணித்தார் ஒரு ஆசாமி.இருந்த அவசரத்தில் படிக்காமலேயே….என்ன? என்றேன்.
“கர்த்தராகிய இயேசு மீண்டும் வருகிறார் சகோதரா” என்றார்.
நான் ரேஷன் வாங்கிய பிறகா…இல்லை அதற்கு முன்னமேவா? என்றேன்.“அதற்கு முன்னால் நீங்கள் தேவ ஊழியர்களின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்றார்.
நான் ஸ்நானமே வாரத்துக்கு ஒரு தடவைதான்….அதென்ன ஞானம்? என்றேன்.
“அதற்குப் பிறகு நீங்கள் ஜீவியம்….தெய்வீக சுகத்துக்குக் கீழ்படிந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் மறுபடியும்.
சாதாரண சுகத்துக்கே கீழ்படிபவன்….தெய்வீக சுகம்ன்னா சும்மாவா இருக்கப் போறேன்? சீக்கரம் மேட்டருக்கு வாங்க என்றேன்.
அப்படியே இயேசு வந்தாலும் ஏழு வருட காலம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பாராம்…அப்போது இன்னொரு டூப்ளிகேட் இயேசு மீசைக்கு மேலே ஒரு மச்ச அடையாளத்தோடு பயங்கர ஆட்சி நடத்துவாராம். ஏழு முடிந்த பிறகு இயேசுவின் ஏழரை அடச்சே….ஆயிரம் வருட ஆட்சி நடக்குமாம்….
அப்புறம் ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெற்ற என்னைப் போன்ற “பரிசுத்தவான்கள்” த்ரிஷா, பாவ்னா போன்ற தேவதைகளோடு சூப்பரான வாசஸ்தலங்களுக்கும்….
உங்களைப் போன்ற ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெறாதவர்கள் சுப்ரமண்யசாமி போன்றவர்களோடு அக்கினிக் கடலுக்கும் போவீர்களாம்….உளறிக்கொண்டே போனது அது……
அது சரி நீங்க எந்த டாக்டர் கிட்ட டிரீட்மெண்ட் எடுத்துக்கறீங்க? என்றேன் சன்னமாக.
“அப்பாலே போ சாத்தானே” என்றபடி கையில் எதையோ அடிக்க எடுக்க..
உடு ஜூட் என்றபடி பின்னங்கால் பிடறியில் பட ரேஷன் கடை நோக்கிப் பறந்தேன்.

ஒரு முன் குறிப்பு

வெள்ளைக்கார துரைகள் கணக்காய் படங்களுக்கு இங்கிலீஷ் பெயர் வைத்துக் கொண்டிருந்தவர்கள் தமிழுக்கு இறங்கி வர….இந்த நேரம் பார்த்து “அகம் பிரம்மஸ்ய” என்று சமஸ்கிருதத்தில் துணைத் தலைப்பை வைத்திருக்கிறார் பாலா. சமஸ்கிருதத்துக்கும் தமிழக அரசின் வரி விலக்கு உண்டா என்ன?
“நான் கடவுள்” படத்திற்காக ஏகப்பட்ட பிச்சைக்காரர்களை திரட்டி படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருப்பதாகச் செய்தி.
இதைக் கேள்விப்பட்டதும் சட்டென்று ஒரு பொறி தட்டியது. ஏற்கெனவே ஆசிய வங்கி, ஐ.எம்.எப், உலக வங்கி, பரலோக வங்கி என ஒவ்வொரு வங்கிகளாய் படியேறி தலையைச் சொறிந்து, பல்லை இளித்துக் காசு வாங்கி வந்த அனுபவம் கை கொடுக்கும் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள மாநில நிதியமைச்சர்கள்… மத்திய நிதியமைச்சர் என அனைவரையும் திரட்டிக் கொண்டு வந்து இவர்களோடு நடிக்க வைத்தால் தத்ரூபமாக இருக்குமே படம் என்பதுதான் அந்தப் பொறி. சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதுக்குக் கூட வாய்ப்பிருக்கிறது. எதற்கும் அதைக் கொஞ்சம் பரீட்சித்துப் பாருங்களேன் பாலா….

Monday, February 25, 2008

உன் காதலும்... என் காதலும்

எனை தூரப்பார்த்து உற்சாகப்படுவதிலும்
பக்கத்தில் வந்து பதட்டப்படுவதிலும்
இடம்வலம்இடம்வலம்இடம்வலம்
என அல்லோலகல்லோலப்படும் உன் விழிகளிலும்
பேசவரும் வார்த்தைகளையெல்லாம்
உதடுமடித்து எனக்கே வலிக்குமளவு நீ கடித்தலிலும்
நீண்டும்சுருங்கியும் நீண்டும்சுருங்கியும்
பாடுபடும் உன் உதடுகளின் ஓரவஞ்சனை சிரிப்புகளிலும்
சரியாயிருக்கும் ஆடையை சரிப்படுத்திக்கொண்டேயிருக்கும்
உன் பதட்டம் தோய்ந்த மென்காந்தள் விரல்களிலும்
வழிந்தோடுகிறது
என் மீதான உன் காதல்
இதையெல்லாம்
கண்டு ரசித்து உண்டு கொழுத்து
பேரண்டமாய் விரிந்து வளர்ந்து
எனை படுத்துகிறது
உன் மீதான என் காதல்

அழகு குத்தியவள்...


அழகு குத்தியவள்...

உனக்கு வலிக்கவில்லையாடி...
உடல் முழுக்க இப்படி
அழகு குத்தி வைத்திருக்கிறாயே...

அஞ்சாதே - திரைப்படப் பார்வை

மிக நீ..........ண்ட இடைவெளிக்குப் பிறகு, நல்ல படம் பார்த்த திருப்தியைத்தந்த படம். நட்பை அடிநாதமாக அமைத்து பல தளங்களில் இயங்குகிறது படம். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும் வாழ்வின் எதார்த்தம்தான் படத்தின் திருப்புமுனை. SI ஆவதே தன் வாழ்நாள் லட்சியமாக செயல்படும் கிருபாவும்(அஜ்மல்), “நான் போலீஸ் வேலைக்கு போகமாட்டேன். எல்லாரும் மாமான்னு கூப்பிடுவாங்க..” என்று சொல்லிக்கொண்டு இலக்கில்லாமல் சுற்றித்திரியும் சத்யாவும் (நரேன்) மிக நெருங்கிய நண்பர்கள். இருவரின் அப்பாக்களும் போலீஸ்காரர்கள். துரத்தும் வாழ்க்கைச்சூழலில் சத்யா SI தேர்வில் (குறுக்கு வழியில்) தேர்ச்சியடைய, கிருபா தோல்வியடைந்து இலக்கின்றி குடித்து அலையும் நிலைக்கு வருகிறான்.
பெண்களை கடத்திவந்து, கற்பழித்து, பணம் பறிக்கும் கும்பலாக லோகுவும் (பாண்டியராஜன்), தயாவும் (பிரசன்னா) இருக்கிறார்கள். இவர்களுடன் தன்முனைப்பின்றி கிருபா இணைகிறான். உச்சபட்சமாக இவர்கள் போலீஸ் IG யின் பெண்களை கடத்துகிறார்கள். அதன் பின் போலீஸ் இவர்களை எப்படி வளைக்கிறது... தயா மற்றும் லோகு என்ன ஆனார்கள்... தன் நண்பன் கிருபாவுக்காக சத்யா என்ன செய்கிறான்... இப்படி பல கேள்விகளுக்கான பதிலை எதார்த்தத்துடன் தருகிறது படம்.
நரேன், அஜ்மல் மற்றும் பிரசன்னா அனைவருக்கும் அற்புதமான களம் அமைத்து தந்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். மூவரும் அதை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் அழகு. “அழகிய தீயே...” படத்தில் பார்த்த பிரசன்னாவா இது என்று ஆச்சரியப்படவைக்கும் விதத்தில் மிகவும் தைரியமாக வி்ல்லன் பாத்திரத்தை ஏற்று அசத்தியிருக்கிறார். நீண்ட குர்தாவும், வலது கையில் பெண்கள் ஸ்டைலில் கடிகாரம் கட்டிக்கொண்டு அடிக்கொருமுறை கையைத்திருப்பி மணிபார்க்கும் மேனரிஸமும், வழிந்து தொங்கும் தலைமுடிக்கிடையே சாதாரணமாக ஆனால் கூர்ந்து பார்க்கும் பார்வையுமாக அனைத்து பாராட்டுகளையும் தட்டிச்செல்கிறார் பிரசன்னா. அவருடைய இளமையான குரல் இந்த பாத்திரத்துக்கும் பொருந்தி வந்திருப்பது ஆச்சரியமான மகிழ்ச்சி. இனி இவர் அதிகம் கவனிக்கப்படுவார்.
படத்தின் அறிமுகக்காட்சியிலிருந்து கடைசிவரை பரபரப்பாக வரும் நரேன் சத்யா பாத்திரத்தில் ஜோராக பொருந்துகிறார். ஓவர் ஆக்டிங் போலத்தெரியும் அவருடைய சில பாடி லாங்வேஜ் உறுத்தலாக இருந்தாலும் போகப்போக அது நமக்கு பழகிப் போகும் என்றே தோன்றுகிறது. மலையாள வாசனையோடு அவர் பேசும் தமிழும் அப்படியே. தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் கனமறிந்து ஒவ்வொரு காட்சியிலும் தன்னை முழுமையாக தந்திருக்கும் நரேன் பாராட்டிற்குரியவர். தண்ணி அடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் வரமாட்டேன் என்று சலம்பும் போதும், தியேட்டரில் “தவமாய் தவமிருந்து..” ராஜ்கிரணைப் பார்த்து விட்டு... “இவன்தாண்டா அப்பன்...” என்று ரவுசு விடும்போதும் நம்மையும் ரசிக்க வைக்கிறார்.
கிருபா எனும் பரிதாபத்துக்குரிய பாத்திரத்தில் தமிழில் அறிமுகமாயிருக்கும் அஜ்மல் ஒரு குறிப்பிடத்தக்க புதுவரவு. கிருபாவின் தங்கையாக வரும் விஜயலட்சுமிக்கும் கதையோட்டத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அதை பயன்படுத்திக்கொண்டிருப்பதும் சிறப்பு. குருவி என்கிற பாத்திரத்தில் வரும் கை ஊனமானவர் (பெயர் தெரியவில்லை), கால் ஊனமான இன்னொருவர் (அவர் பெயரும் தெரியவில்லை), பாண்டியராஜன், பொன்வண்ணன், MS பாஸகர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட மற்ற அனைத்து பாத்திரங்களும் தேவையறிந்து படைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரமும் சிரத்தையுடன் செதுக்கப்பட்டிருக்கிறது. அனைவரின் பங்களிப்பும் பிரமாதம்.
படத்தின் கேப்டன் மிஷ்கினுக்கு ஆளுயுர பொக்கே கொடுத்து பாராட்டலாம். இந்த திரைக்கதை மிகவும் அற்புதமாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. தொய்வே ஏற்படாமலும், அதே நேரம் விலாவரியாகவும் சொல்லப்படும் காட்சிகள் மிகப் பிரமாதம். ஒவ்வொரு காட்சியும் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டு, தேர்ந்த தேடலுக்குப்பின், அந்த சூழலுக்கேற்ப காட்சிப்படுத்தப்பட்டு நம் மனதைக்கவர்கிறது. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற பதட்டத்தில் நம்மை கடைசிவரை வைத்திருப்பதில் இயக்குனர் வெற்றியடைகிறார். படத்தில் வரும் சின்னச்சின்ன ட்விஸ்ட்டுகளும் லாஜிக்கோடு அமைந்திருப்பது மிகச்சிறப்பு.
சுந்தர் சி.பாபுவின் பாடல்களை தியேட்டரில் தம்மடிக்க வெளியே போகாமல் அமர்ந்து கேட்கலாம். படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருக்கிறது. மகேஷின் ஒளிப்பதிவு ஒவ்வொரு சூழலிலும் அந்த தன்மைக்கேற்ப செயல்படுகிறது. படத்தின் முதல் காட்சி, தரையோடு தரையாக கேமரா சுழலும் காட்சி என தன் இருப்பை பறைசாற்றுகிறார் ஒளிப்பதிவாளர்.
“எனக்கு ஒரு ஃபுல் ஒரிஜினல் சரக்கு வேணும்...” என பிரசன்னா ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நம் டாஸ்மாக்கில் எல்லாம் டூப்ளிகெட் சரக்குதானோ என்ற அங்கதக்கேள்வி எழுகிறது. குறுக்கு வழியில் SI தேர்வில் தேர்ச்சியடைவதற்கு சத்யா செய்யும் முயற்சிகளும் அந்த செயல்களும் மிகவும் அங்கதத்தோடு நம் சமூக அமைப்பை சாடுகின்றன. ரோட்டில் வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக்கிடக்கும் ஒருவனை காப்பாற்ற சத்யா செய்யும் முயற்சிகளும் அதன் விளைவும் அச்சு அசல் உண்மை நிலையை அப்பட்டமாக காண்பிக்கின்றன. IG யின் பெண் பிள்ளைகள் கடத்தப்பட்டால் போலீஸ் டிபார்ட்மெண்ட் என்ன செய்யும்... சுற்றி நம்மை போலீஸ் வளைக்கும் சூழலில் அதிலிருந்து தப்ப சமூகவிரோதிகள் என்னவெல்லாம் செய்வார்கள்... இப்படி பல சூழ்நிலைகளை ஆய்ந்து நம்பும் விதத்தில் காட்சியமைத்திருப்பது சிறப்பு.
மிகவும் அரிதாக வரும் தரமான படங்களின் வரிசையில் இப்படமும் சேர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்கும்படியான விஷயங்களும், புத்திசாலித்தனமான ட்விஸ்ட்டுகளும் படத்தை மீண்டும் பார்க்கத்தூண்டும்

நிர்வாண உலகம்

நிர்வாண உலகில் கோவணம் கட்டியவன் கூட பைத்தியக்காரன் என்பார்கள். உடையணிந்தோர் உலகில் நிர்வாணம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் ஒரு நிர்வாணம் உலகெங்கிலும் கொண்டாடப் படுகிறது. அது புத்தரின் நிர்வாணம்.ஆடை துறத்தல் நிர்வாணமல்ல. ஆசை துறத்தலே நிர்வாணம்.புத்தர் உடல் மீதான பற்றை விடுத்து நிர்வாண நிலையடைந்த நாளை பிப்ரவரி 8ம் தேதி பவுத்தர்கள் கொண்டாடுகின்றனர். சில பகுதிகளில் பிப்ரவரி 15ம் தேதியும் அனுசரிக்கப் படுகிறது...கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு மே மாத பவுர்ணமி தினத்தில் இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில் பிறந்த சித்தார்த்தன் பின்னாளில் கவுதம புத்தராக பரிணமித்த்து எப்படி?வெளியுலகத் தொடர்புகளின்றி அரண்மனையின் சுகபோகங்களை மட்டுமே கண்டு வளர்ந்து, தனது 16வது வயதில் யசோதரையை மணந்த சித்தார்த்தன் புற உலக வாழ்க்கையின் துன்பங்களை உணராமலே வாழ்ந்து வந்தார். மனைவியோடும் மகன் ராகுலனோடும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் தனது 29ம் வயதில் முதன் முதலாக ஒரு புறப்பயணம் மேற்கொண்டபோது ஒரு பிச்சைக்கார வயோதிகரையும், துன்புறும் ஒரு நோயாளியையும், ஒரு பிண ஊர்வலத்தையும், துறவி ஒருவரையும் காண நேரிட்டது. வாழ்க்கையின் நிலையாமை பற்றிய பல புரிதல்களை இவர்களில் கண்டு கொண்ட சித்தார்த்தன் உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டான்..சித்தார்த்தன் பிறந்த போது வருகை தந்த ஞானி ஒருவர் அவன் துறவியாக வருவான் என்று கூறியதால் துன்புறும் மக்களைக் காண அனுமதிக்காமல் மகிழ்ச்சியான மனநிலையிலேயே வைத்து சுகபோகங்களில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது...அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தி இருக்க வேண்டும். அளவுக்கு மீறிய சுகபோகங்கள் திகட்டி விட்ட சித்தார்த்தன் வாழ்க்கையில் வெறுப்புற்றான். சுகபோகங்கள் இல்லாத மக்கள் இருப்பதையும் அவர்களின் துன்பம், மூப்பு, நோய், வறுமை, மரணம், வாழ்க்கையின் நிலையாமை போன்றவற்றை உணர்ந்து கொண்டான்.மனைவி, மகன், அரண்மனை சுகபோகங்களை உதறி வெளியேறிய சித்தார்த்தன் தனது 35ம் வயதில் கயா என்னுமிடத்தில் போதிமரத்தடியில் கடும் தவம் மேற்கொண்டார். அங்கே ஞானநிலை பெற்று சித்தார்த்தன் புத்தரானார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என்பது அவரது போதனைகளின் அடிப்படையாக இருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஆசைகளைத் துறந்து புத்த நிலையை அடைய முடியும் என்பது அவரது அறிவுரை...புத்தரின் காலத்துக்குப் பின் அவரது அறிவுரைகள் பவுத்த மதமாக பரிணமித்தது.கலிங்கப் போருக்குப் பின் பவுத்தத்தை தழுவிய அசோகன் தனது மகளையும் மகனையும் புத்த துறவிகளுடன் அனுப்பி வைத்தான். அவர்களே இலங்கை, இந்தோனேஷியா முதலிய தென்கிழக்காசிய நாடுகளின் பவுத்தம் பரவக் காரணமானவர்கள்.புத்தரின் சீடர்களால் பரப்பப் பட்ட பவுத்த மதம் பின்னாளில் இந்தியாவில் தனது செல்வாக்கை பெருமளவு இழந்த போதிலும் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. தாழ்த்தப் பட்டவர்களின் தலைவராக கொண்டாடப் படும் அம்பேத்கர் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு உயர்சாதி மக்களால் மதசமத்துவம் தரப்படாத நிலை கண்டு தனது மக்களோடு பவுத்த மததுக்கு மதம் மாறினார்

ஆனந்தவிகடனின் போக்கு - ஒரு வாசகனின் பார்வை

மூன்று ரூபாய்க்கு ஆனந்தவிகடன் விற்ற காலத்திலிருந்து, விகடன் வாசித்து வருகிறேன். அவ்வப்போது விகடனின் தோற்றம் மற்றும் உள்ளீடு மாறும். ஒவ்வொரு மாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இதழை பொலிவுபடுத்தியே வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை. புத்தம்புதிய பகுதிகள், பரீட்சார்த்த முயற்சிகள் என விகடனின் அனைத்து அவதாரங்களும் பெரிதும் மகிழ்ந்து கொண்டாடப்பட்டவையே. மதன், சுஜாதா, வைரமுத்து ஆகியோரின் பங்கு மிகவும் சிறப்பாக இருந்த நேரத்தில் மற்ற பகுதிகளும் இவற்றிற்கு இணையாக வரவேண்டுமென்று மிக சிரத்தையோடு எழுதப்பட்டன. விகடனின் ஜோக்குகளுக்கென்று இன்றும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றதென்பது உண்மை.
விகடனிலிருந்து மதன் விலகியதும், சீனிவாசன் பொறுப்பேற்றதும் மிக முக்கியமான நிகழ்வுகளாக நான் பார்க்கிறேன். ஆயினும் மதன் விலகியதை மிகவும் நாகரிகமாக பாலசுப்ரமணியன் கையாண்டார். அவருடைய “வணக்கம்” கட்டுரை விகடனின் வாசகர்களின் மனதில் இன்றும் நிற்கிறது. அந்த நிகழ்விற்கு பின்னர் மதன் “விண் நாயகன்” எனும் இதழைத்தொடங்கி (“இந்தியா டுடே” சைஸில்) நடத்த, அந்த பத்திரிகையைப்பற்றி குமுதம் அரசு பதில்களில் “எழுந்து நின்று பாராட்டி வரவேற்பதாக” எழுதப்பட்டது. ஆயினும் அந்த இதழ் சொற்ப நாட்களில் நின்றுபோயிற்று. இவை நடந்து கொண்டிருந்தபோதிலும் மதன் தன் “ஹாய் மதன்” பகுதியை நிறுத்தாமல் விகடனில் எழுதிக்கொண்டுதானிருந்தார். மதன் விகடனிலிருந்து விலகிய சூட்டோடு குமுதத்தில்கூட ஒரு கட்டுரைத்தொடர் எழுதினார் (பெயர் நினைவிலில்லை).
விகடனில், தலையங்கம் மற்றும் கார்ட்டூன் இரண்டு பக்கங்களில் வரும். சில காலம் மதனின் கார்ட்டூன் இல்லாமலேயே விகடன் வந்ததாகக்கூட நினைவு. பின்பு ஹரனின் கார்ட்டூன்கள் முழுப்பக்க அளவில் ஆசிரியரின் ஒரு பக்க கடிதத்தோடு வரத்துவங்கின. இது கிட்டத்தட்ட இரண்டாவது தலையங்கம் மற்றும் இரண்டாவது முழுப்பக்க கார்ட்டூனாகவே அமைந்தது. மதனை முழுமையாக விலக்கிவிட இயலாத தன்மையாலோ, அடுத்த ஸ்டெப்னி போன்று ஹரனை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற உந்துதலினாலோ இது நடந்திருக்கலாம். இது விகடனின் ஆசிரியர் குழுவின் முடிவாக இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லை. ஆயினும் கார்ட்டூன் ஸ்பெஷலிஸ்ட்டாக விகடன் கொண்டாடிய மதன் இருக்கையிலேயே, இன்னொருவரின் முழுப்பக்க கார்ட்டூனை தொடர்ந்து வெளியிடுவது மதனுக்கு எப்படிவொரு அசூசையான உணர்வைக் கொடுத்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை.
ஹாய் மதனும் இப்போது நான்கு பக்கங்களில் வருவதில், இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் புகைப்படங்கள் (பெரும்பாலும் கவர்ச்சிப் படங்கள்) எடுத்துக்கொள்கின்றன. கல்லூரிக்காலத்தில் மதனுக்கு கேள்வி எழுதிப்போட்டு விகடனை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த வாசகன்தான் நான். இப்போது இந்நிலையைப் பார்க்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது.
மேலும் சமீபத்திய ஞாநி மற்றும் ஜெயமோகன் விவகாரங்களில், ஆனந்த விகடனின் நிலைப்பாட்டினை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இப்படித்தான், இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று ஆனந்தவிகடனையும் அதே தட்டில் வைத்து அளந்து பார்த்துவிட முடியவில்லை. ஆனந்தவிகடனின் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையோ அல்லது ஆனந்தவிகடன் என் மீது செம்மைப்படுத்தியிருந்த நம்பிக்கையோ தான் என்னுடைய இந்த சிந்தனைக்குக்காரணம் என்று நினைக்கிறேன்.
மேலும் சமீபத்திய ஆனந்தவிகடனின் கவர்ஸ்டோரிகளும் யூகத்திலான விஷயங்களைக்கொண்டே எழுதப்படுகின்றன. உதாரணம் 1 - “ஷங்கர் இயக்கத்தில் ரோபோவில் அஜீத் தான் நடிக்கிறார் - பேசி விட்டார்கள் - அந்த வட்டாரம் சொல்கிறது - கோடம்பாக்கம் பற்றிக்கொண்டு திகுதிகு வென்று எரிகிறது” - என்கிற ரீதியில் ஒரு அட்டைப்படக் கட்டுரை பரபரப்பாக வெளியானது. மற்ற பத்திரிகைகளில் வராத ஒரு விஷயத்தை தான் முந்தித் தந்து விட்டோம் என்று பறைசாற்றத்தான் இந்த அட்டைப்பட கட்டுரை. ஆனால் நடந்த கதையோ வேறு.
சமீபத்திய விகடனின் அட்டைப்படக் கட்டுரையும் ( “வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்!” - அமிதாப் வழியில் ரஜினி) யூகங்களைக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. தலைப்பில் சொல்லப்பட்ட விஷயத்தைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பேசாத நிலையிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்ட இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விகடன் ஆசிரியர் குழு நம்முடைய தமிழ் ப்ளாக்குகளை சமீபகாலமாக படிக்க ஆரம்பித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கவர்ச்சியான தலைப்பு வைத்து விட்டு அதைப்பற்றி பேசாமல் எழுதப்படும் பதிவுகளின் பாதிப்பாகத்தான் இந்த கட்டுரை வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.
ஆனந்தவிகடனின் தரம் இறங்கி வந்திருப்பதாகவே என் எண்ணத்தில் தோன்றுகிறது. இனியும் என்னால் முன்பு போல ஆவலாவலாக விகடனைத் தேடிப் பிடித்து வாங்கி வரி விடாமல் ஒவ்வொரு படைப்பையும் படிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இதை எழுதுகையில் கூட ஒரு சொல்லமுடியாத வலியை உணர்கிறேன்.

எப்படி? ஒரு கிறித்துவப் பெண் ஒரு இந்துவைக் கல்யாணம் பண்ணலாம்?

'மிஸ்ஸியம்மா" படம் பார்த்திருப்பீர்களோ, இல்லையோ, 'வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ என் கதையை' என்ற பாடலைக்கேட்டிருப்பீர்கள். படம் பார்த்திராதவர்களுக்கு ஒரு கதைச் சுருக்கம்: நடிகையர் திலகம் சாவித்திரி (மேரி) -க்கும் சாம்பார் -(sorry, ஜெமினி கணேசனின் அந்தக்காலத்துச் செல்லப்பெயர்) -க்கும் காதல், ஊடல் அது இதுன்னு வந்து கடைசி சீனில் இரண்டுபெருக்கும் கல்யாணம். பெண் - கிறித்துவள் (ஆனால், உண்மையில் சிறு வயதிலேயே இந்துக்குடும்பத்திலிருந்து காணாமல்போன, கதாநாயகனின் முறைப்பெண்தான்); ஆண்: இந்து. மதுரையில் இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 'சிடி சினிமா' தியேட்டரில் (இப்போது வெறும் parking lot ஆக மாறியுள்ளது)படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும் ரொம்ப ஆத்திரத்துடன் நான் என் அப்பாவிடம் கேட்ட கேள்வி: 'அது எப்படி? ஒரு கிறித்துவப் பெண் ஒரு இந்துவைக் கல்யாணம் பண்ணலாம்?'.பெரும் மத அடிப்படைவாத உணர்வு (utter fundamentalism) தெரிகிறதா, இந்தக் கேள்வியில்? அந்தக் கேள்வியைக் கேட்ட எனக்கு அப்போது வயது என்ன தெரியுமா? பன்னிரண்டோ, பதின்மூன்றோ. ஒரு கிறித்துவர் இன்னொரு கிறித்துவரைத்தான் மணந்துகொள்ள வேண்டுமென்ற கருத்து அந்த இளம் வயதிலேயே என் மனத்தில் அவ்வளவு ஆழமாகப் பதியக் காரணம் என்ன? ஒரு குழந்தை கேட்கும் குழந்தைத்தனமான கேள்வி அது அல்ல என்பதுநிச்சயம். அந்த வயதிலும் மத உணர்வுகள் அவ்வளவு ஆழமாய் என் மனதில் பதிந்திருந்ததென்றால் அது ஒருவகை 'மூளைச் சலவை'யன்றி வேறென்ன? அதோடு இது குழந்தைப்பருவத்தில் மட்டுமே இருந்த ஒரு நிலையும் அல்ல. ஏனெனில், முதுகலை வகுப்பில் நாத்திகரான என் ஆசிரியர் 'பைபிள்' பற்றி ஏதோ கேலியாகச் சொல்ல, அப்போதே அதி வன்மையாக அவர் கூற்றை நான் கண்டித்தேன் - அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி அறிந்திருந்தும். அந்த அளவு என் மதத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு, ஈடுபாடு...மதங்களை, அவைகள் சொல்லும் கடவுள் கோட்பாடுகளைக் கண்ணை மூடிக் கொண்டால் மட்டுமே நம்பமுடியும்; கண்ணையும், காதையும் கொஞ்சம் திறந்தாலோ, நம் மதங்களாலும், பெற்றோர்களாலும், பிறந்தது முதல் நமக்குக் கற்பிக்கப்பட்ட, ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து கொஞ்சம் விலகி நின்று - with an OBJECTIVE VIEWING - பார்த்தால் (அப்படிப் பார்ப்பது மிக மிகக் கடினம் என்பது நிஜம்; என் மதம்; என் கடவுள் என்ற நிலைப்பாட்டை அறுத்து 'அவைகளை' யான், எனது என்ற பற்றற்றுப் பார்ப்பது அநேகமாக முடியாத காரியம்தான்). அப்படிப் பார்ப்பது எளிதாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! கடினமானதுதான்; ஆனால், முடியாததல்ல. என்னால் முடிந்திருக்கிறது.அதிலும், நான் அறிந்தவரையில் semitic religions என்றழைக்கப்படும் யூதமதம், கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் என்ற இந்த மூன்று மதங்களுமே தங்கள் மதத்தினரை தங்கள் (கெடு) பிடிக்குள் இறுக்கமாக வைத்திருக்க முடிவதற்குறிய காரணம் எனக்குப் பிடிபடுவதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் தெய்வமே உண்மையானது; எங்கள் மார்க்கமே சரியானது; ஆகவேதான், எங்கள் மதத்தை நாங்கள் இறுகப்பற்றியுள்ளோம் என்பார்கள். அப்படியானால், அந்த மூன்றில் எது உண்மையான வேதம்? மூவருக்கும் பொதுவானது - பழைய ஏற்பாடு. யூதர்கள், மோசஸ்வரை பழைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்; கிறித்துவர்களுக்கு அதன் பின்பு - புதிய ஏற்பாடு; இஸ்லாமியர்களுக்கு - கடைசி ஏற்பாடு. இருப்பினும் அவர்களுக்குள்தான் சண்டையே அதிகம்?! ஆனாலும், ஒரு ஒற்றுமை - மூவருமே தங்கள் மதத்தின்மேல் முழு, ஆழ்ந்த, கேள்விகளற்ற - அதைவிட, கேள்வி கேட்கப்பட்டாலே அதை blasphemy என்று நினைக்கும் அளவிற்கு - நம்பிக்கை; கிறித்துவர்களின் மொழியில் - விசுவாசம், இஸ்லாமியரின் வார்த்தைகளில் - Fidelity.நானும் மேற்சொன்ன மாதிரியே முழுக்கிறித்துவனாக, முழு விசுவாசமுள்ள கத்தோலிக்க கிறித்துவனாக இருந்துவந்தேன். சாதாரணமாக, இளம் வயதில் மதத்தைவிட்டுச் சற்றே விலகியிருந்து, பின் கல்யாணமெல்லாம் ஆகி குழந்தை குட்டி என்று சம்சார சாகரத்தில் மூழ்கி, - இந்துக்கள் சொல்வதுபோல், 'க்ரஹஸ்தன்'' என்ற நிலைக்குப் பிறகு வரும் மாற்றம் போல் - மறுபடியும் கடவுளைச் சரணடைவதுதான் இயல்பு. ஆனால், என் கேஸ் கொஞ்சம் வித்தியாசம். நான் ஏறத்தாழ 40 -43 வயதுவரை என் மதத்தின் மேல் மட்டற்ற நம்பிக்கையும், என் மதக் கடவுள் மேல் பக்தியும் கொண்ட ஒருவனாகவே இருந்து வந்தேன். அப்படியிருந்த நான் ஏன் இப்படி ஆனேன்? அது ஒரு நாளிலோ, சில மாதத்திலோ ஏற்பட்ட மாற்றமில்லை; Theist என்ற நிலையிலிருந்து agnostic என்று என்னை நானே கூறிக்கொள்ளவே பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று; பின் athiest என்று என்னை நானே - பலத்த தயக்கங்களுக்குப் பிறகே - கூற மேலும் பல ஆண்டுகள் ஆயிற்று. ஆக, இது மிக மிக தயங்கித் தயங்கி, நின்று நிதானித்து, மெல்ல மெல்ல எடுத்துவைத்த அடிகள். எந்தவித ஆவேசமோ, யார் மீதோ அல்லது எதன் மீதோ ஏற்பட்ட ஏமாற்றங்களினாலோ, கோபதாபங்களாலோ வந்த மாற்றம் இது இல்லை. எனக்கு நானே பரிட்சித்துப்ப்பார்த்து, கேள்வியும் நானே; பதிலும் நானே என்றும், அதோடு, பதிலுக்காக அங்கங்கே அலைந்தும் எனக்கு நானே பதிலளித்து அதன் மூலம் வந்த முடிவுகளை ஏற்றுக்கொண்டேன். இது ஒரு evolution - a very slow 'blossoming'! (Evolution என்ற சொல்லுக்கே அதுதான் பொருள்). மற்றவர்களின் சமய எதிர்ப்புக்கொள்கைகள் எதையும் அப்போது நான் என் காதில் வாங்கிக்கொண்டதில்லை. எனெனில், என் கருத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பாயிருக்கவேண்டுமென்று விரும்பினேன். உதாரணமாக, 'Why I am not a Chrisitian?" என்ற Bertrand Russel எழுதிய புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து முதல் 30 ப்க்கங்களோடு நிறுத்திக்கொண்டேன். ஏனெனில், (prayer) ஜெபம் பற்றி நான் நினைத்ததையே அவரும் கூறுவதாகப்பட்டது. அதோடு, அந்தப் புத்தகத்தின் தாக்கம் என்மீது எவ்வகையிலும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.'சுயம்பு' என்று வைத்துக்கொள்வோமே!!இந்த பரிணாமத்தைத்தான் மெல்ல உங்களிடம் சொல்ல வந்துள்ளேன். என் தவறுகளைத் திட்டாமலேயே திறுத்துங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட நெடும் தேடல்... தொடர்ந்த தேடல். முடிவைத்தொட்டு விட்டேன் என்று கூறவில்லை. நான் சென்ற எல்லை வரை உங்களை அழைத்துச் செல்ல ஆசை - ஒரே ஒரு நிபந்தனை; கஷ்டமானதுதான். உங்கள் மனக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்களேன்

RAINCOAT

நேற்று இரவு பார்த்த படம் RAINCOAT. O Henry-யின் கதைத் தழுவலாக இந்தியில் அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா நடித்தது. மொத்தம் ஆறே ஆறு கதாபாத்திரங்கள் - நாயகன், நாயகி, நாயகனின் அம்மா, நண்பன், நண்பனின் மனைவி, வீட்டுச் சொந்தக்காரன். இதில் நாயகனின் அம்மா, நண்பன் இருவருக்கும் இரண்டு இரண்டு வசனம் இருக்கலாம்; நண்பனின் மனனவிக்கு அரைப் பக்க வசனம் -ஆனாலும் மிகவும் அழுத்தமான, கதையின் மய்யப் புள்ளியைக் காட்டும் வசனம்; வீட்டுச் சொந்தக்காரனுக்கு ஒன்றரைப் பக்க வசனம். மீதி முக்கால்வாசிப் படம் முழுவதும் நாயகன் ஒரு நாற்காலியில் சிகரெட்டுப் பிடித்துக்கொண்டிருக்க, பக்கத்தில் ஒரு கட்டிலில் காலைக்கட்டிக் கொண்டு ஐஸ்வர்யா அமர்ந்திருக்க, இருவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கதைப்படி காலை ஆரம்பிக்கும் கதை இரவோடு முடிகிறது. costume, sets ... இப்படி எந்தச் செலவுமில்லாமல் எடுத்த படத்தில் ஐஸ்வர்யா நடித்தது ஆச்சரியாகத்தான் இருந்தது. அவரது glamour-க்கு எந்த அவசியமுமில்லை. படத்தின் கடைசி ஐந்து நிமிடம், அதிலும் தன் நிலைமையைப் புரிந்து கொண்டதால் நண்பனின் மனைவியின் கடந்த கால நினைவுகளைப் புரிந்து கொள்ளும் நாயகன் "திருமணத்திற்குப் பிறகு நீங்கள் அவரைச் சந்தித்தீர்களா?" என்று கேட்கும் கேள்வி அழகு என்றால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் சொல்லும் பதிலின் ஆழம் ...இன்னொரு பெருமூச்சு ... இப்படியெல்லாம் எப்போது தமிழ்ப் படம் வரும்? அதையும் ரசிக்கும் நிலைக்கு எப்போது நம் தமிழ் ரசிகர்கள் உயர்வார்கள்? (இது பலருக்கு உறுத்தும்; அதுமாதிரி ரசனைதான் உயர்வென்று எப்படிக் கூறப் போச்சுன்னு வந்திராதிங்க'ப்பு